நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘கபளீகரம்’.வட இந்தியாவில் லாரிகளைத் திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன.பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது பரபரப்பூட்டியது. இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துத்தான் ‘கபளீகரம்’ படம் உருவாகியிருக்கிறது இப்படத்தை மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக்.ஒரு நேர்மையான துடிப்பான காவல்துறை அதிகாரியாக நாயகன் தக்ஷன் விஜய் நடித்துள்ளார். மேலும் மைம் கோபி, யோகிராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூர், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதை கிருஷ்ணகிரியிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் நடப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.”சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இப்படிப்பட்ட லாரி திருடும் கும்பல் கல்கத்தாவில் சிக்கியது. இந்தக்கும்பல்.லாரிகளைத் திருடும் போது லாரி ஓட்டி வந்த ஓட்டுநரையும் உடனிருக்கும் கிளீனரையும் கொலைசெய்து எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்கி விடுவார்கள்.எந்தத் தடயமும் இருக்காது அவர்களின் செயல்களைப் பார்த்த போலீசார் அது கற்பனையையே மிஞ்சுவதாக இருந்ததாக வியந்துள்ளனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது” என்கிறார் இயக்குநர் தர்ஷன் விஜய்.இப்படத்தில் சோகப் பாடல் ஒன்றும் மெலோடி பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் உள்ளன. ஒன்றை மதுபாலகிருஷ்ணனும் இன்னொன்றை ஸ்ரீகாந்த் ஹரிசரணும் பாடியுள்ளனர்.சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளனர்.படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.